தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

மனித வாழ்வை நாசப்படுத்தும் குரோதம்.


அகில உலகத்தையும் படைத்த ஒரே இறைவனினால்சிறப்பான அறிவு வழங்கப்பட்டு படைக்கப்பட்ட மனிதன் ஒரு சமூகப் பிராணியாகஇருக்கிறான். சமுதாயத்துடன் ஒட்டி, உறவாடும் மனிதன் பலவிதமான கொள்கைகளையும்,குணங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறான்.

பசி, தூக்கம், தாகம், போன்ற உடலியல் சார்ந்த உணர்ச்சிகள் மனிதனுக்கு இருப்பதைப் போல் கோபம், புன்னகை, சந்தோஷம், அமைதி, அழுகை பொறாமை, வெறுப்பு போன்ற உளவியல் சார்ந்த குணங்களும் மனிதனின் பிறவியிலேயே அவனுடன் ஒட்டி இருக்கத் தான் செய்கிறது.


மனித வாழ்க்கையில் பலவிதமான சிக்கள்கள் பிரச்சினைகள் எல்லாம் மனிதனுக்கு ஏற்படுகின்றன. அந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணமாக அவனுடைய உளவியல் தொடர்பான குணங்களே இருப்பதை நாம் காணமுடிகிறது.

அடுத்தவன் மேல் கொள்ளும் கோபம், பொறாமை, சந்தேகம் என்று அனைத்தும் சேர்ந்து பலவிதமாக சிக்கள்களையும் வாழ்வில் ஏற்படுத்துவதை நாம் உணர முடிகிறது.

மனிதனின் தீய குணங்களை நாம் பட்டியல் போட்டுப் பார்த்தால் அல்லது அந்த தீய குணங்களில் மிகவும் பாரிய தாக்கங்களை உண்டுபண்ணக் கூடிய பிரச்சினை எது என்பதை நாம் தேடிப்பார்த்தால் அது ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது கொள்ளும் குரோதமாகத் தான் இருக்க முடியும்.

இந்தக் குரோத மனப்பான்மையின் காரணமாக மனிதன் தனது நிம்மதியையும் கெடுத்து மற்றவர்களின் நிம்மதியையும் பாலாக்கிவிடுகிறான்.

அடுத்தவர்கள் நன்றாக வாழக்கூடாது. தன்னை விட உயர்ந்த இடத்தில் யாரும் இருக்கக் கூடாது. தான் மாத்திரம் தான் எப்போதும் வசதி வாய்புகள் உள்ளவனாக இருக்க வேண்டும். அடுத்தவனிடத்தில் இருக்கும் அனைத்தும் தனக்கு சொந்தமானதாக மாற வேண்டும் போன்ற இன்னோரன்ன கெட்ட குணங்களை இந்த குரோத மனம்பாண்மை தான் தோற்றுவிக்கிறது.

இந்தத் தீய குணத்தினால் நமது குடும்பங்கள் தொடங்கி உலக அளவில் பல விதமான பிரச்சினைகளும் உருவெடுப்பதை நாம் காண முடிகிறது.

தீய எண்ணங்களே பாவத்தின் முதல் படி.

ஒரு மனிதன் பாவத்திற்கு செல்வதற்கு முதல் காரணமாக அமைவது அவனுடைய உள்ளமும், அதில் தோன்றும் கெட்ட எண்ணங்களும் தான். தீய எண்ணங்களை பற்றி தெளிபுபடுத்தும் இறைவன் அதை விட்டும் விலகிவிடும் படி நமக்கு எச்சரிக்கை விடுக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெருப்பீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையவன். (49-13)

ஒரு மனிதனின் உள்ளத்தில் குரோதம் என்ற தீய குணம் குடி கொள்வதற்கு முதல் காரணமாக அமைவது இந்த தீய எண்ணங்கள் தான். தீய எண்ணங்கள் குரோதங்களாக மாற்றம் பெற்று அந்த குரோதங்கள் மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கும், அவர்களைப் பற்றி ஆராய்வதற்கும் வழிவகைகளை உண்டாக்குகிறது. சில நேரங்களில் அதுவே பலவித பாரதூரமான விளைவுகளையும் உண்டாக்கி விடுகிறது.

எந்தளவுக்கென்றால் குரோதம் என்ற இந்த தீய குணத்தினால் கொலை வரை சென்ற பிரச்சினைகளும் நிறையவே உண்டு.

பேச்சில் உண்டாகும் குரோதத் தனம்.

குரோதத்தை யார் மனதில் கொண்டிருக்கிறாரோ அவருடைய பேச்சிலும் அது வேளிப்படுவதை நாம் காண முடியும். சட்டியில் உள்ளதுதான் துடுப்பில் வரும் என்று சொல்வதைப் போல் மனதில் உள்ளது பேச்சில் வெளிப்படும்.

நபியவர்களின் காலத்தில் மனதில் குரோதத்தை வைத்துக் கொண்டிருந்த யுதர்கள் நபியவர்களைப் பற்றிய கொண்டிருந்த குரோதங்களை தங்கள் நாவுகளினால் வெளிப்படுத்தியதை நாம் ஹதீஸ்களில் காணக் கிடைக்கிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) "அஸ்ஸாமு அலைக்க'' ("உங்கள் மீது மரணம் உண்டாகட்டும்'') என்று கூறினார்கள். நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)'' என்று கேட்டார்கள்.  நான், "அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள்,’"நான்  (அவர்களுக்கு பதிலளித்த போது) அவர்களிடம், "வ அலைக்கும்-(உங்கள் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)' என்று கூறியதை நீ கேட்கவில்லையா?'' என்று சொன்னார்கள். (புகாரி - 2935) 

நபியவர்களை சந்திக் வந்த யுதர்களின் கூட்டம் நபியவர்களுக்கு சிறந்த முறையில் ஸலாம் சொல்வதற்கு பதிலாக வார்த்தை ஜாலத்தின் மூலம் தங்கள் குரோதத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதாவது அஸ்ஸலாமு அலைக்க (உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்!) என்று சொல்வதற்கு பகரமாக நபியின் மீது குரோதம் கொண்ட யுதர்கள் அஸ்ஸாமு அலைக்க” (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்”) என்று நபியைப் பார்த்துக் கூறுகிறார்கள். யுதர்களின் தீய எண்ணத்தை புரிந்து கொண்ட நபியவர்கள் உடனே அவர்களைப் பார்த்து வஅலைக்கும்” (உங்கள் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்) என்று பதில் அளித்தார்கள்.

அதே போல் எங்களை கவணித்து வழி நடத்துங்கள்என்ற வார்த்தையை நபியவர்களின் மேல் கொண்ட குரோதத்தின் காரணமாக யுதர்கள் எங்களின் ஆடு மேய்க்கும் இடையரேஎன்ற அர்த்தத்தில் பயண்படுத்தியதாக அல்லாஹ் திருமறைக் குர்ஆனிலே (2-104) நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.

நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ராஇனா” ( “எங்களை கவணித்து வழி நடத்துங்கள்”) என்று கூறி வந்தார்கள். ராஇனா என்ற வார்த்தைக்கு எங்களின் ஆடு மேய்க்கும் இடையரே என்ற ஒரு அர்த்தமும் இருக்கும் காரணத்தினால் யுதர்கள் நபியவர்களை இந்த இரண்டாவது கருத்தை மனதில் நினைத்துக் கொண்டு அழைத்தார்கள்.

அனைவரின் உள்ளத்தையும் அறிந்த இறைவனோ யுதர்களின் குரோத குணத்தை அறிந்து ராஇனாஎன்ற வார்த்தைக்கு பதிலாக உன்ளுர்னாஎன்ற வார்த்தையை குறிப்பிடும் படி இறைவன் வலியுறுத்துகிறான்.

உன்ளுர்னாஎன்ற வார்த்தைக்கு எங்களை கவணித்து வழி நட்த்துங்கள்என்ற அர்த்தம் மாத்திரமே உள்ளதினால் தான் இறைவன் மேற்கண்ட வார்த்தையை பயண்படுத்தச் சொல்கிறான்.

அதே போல இன்னொரு இடத்திலும் திருமறைக் குர்ஆன் இப்படி சொல்கிறது.

யுதர்களில் சிலர், வார்த்தைகளை அதற்குறிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். செவியுற்றோம். மாறு செய்தோம். (நாங்கள் கூறுவது) உமக்கு சரியாகக் கேட்க்காமல் போகட்டும் எனவும் ராஇனாஎனவும் கூறுகின்றனர். இம்மார்க்கத்தை குறைவு படுத்திட தமது நாவுகளால் (வார்த்தைகளை) மாற்றிக் கூறுகின்றனர். செவியுற்றோம். கட்டுப்பட்டோம். செவிமடுங்கள்! உன்ளுர்னா என்று அவர்கள் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும் அவர்கள் (தன்னை) மறுப்பதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4 - 46)

அதஃனா என்ற சொல் கட்டுப்பட்டோம் என்ற ஒரு பொருளைக் கொண்ட சொல்லாக இருந்தாலும் அதஃனா என்று கூறுவது போல் பாவனை செய்து அஸய்னாஎன்று குரோதத்தை மனதில் நிறப்பிக் கொண்டு நபியவர்களை நோக்கி யுதர்கள் கூறி வந்தனர். இதன் பொருள் மாறு செய்தோம் என்பதாகும். இவர்களின் இந்த குரோதப் போக்குத்தான் மேற்கண்ட (4 - 46) வசனத்தில் சுட்டிக்காட்டப் படுகிறது.  

கொலை செய்யத் தூண்டும் குரோதம்.


குரோதம் என்ற இந்த உளவியல் நோயின் உச்ச கட்டம் கொலை வரை சென்று முடிவதையும் நாம் பார்க்க முடியும். அதாவது அடுத்தவன் மேல் கொண்ட குரோத வெறியின் உச்ச கட்டம் சம்பந்தப் பட்டவரை கொலை செய்தாவது அழித்தொலிக்க வேண்டும் என்பதே அந்த எண்ணம் தரும் இறுதி முடிவாகும்.

காபிர்களுக்கு நபியவர்களின் மேல் ஏற்பட்ட குரோதம் அவர்களை கொலை செய்தாவது அழிக்க வேண்டும் என்றளவுக்கு அவர்களை கொண்டு சென்றது அதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்கினார்கள்.

நபியை கொள்வதற்காக ஒரு பள்ளியை கட்டினார்கள் அந்தப் பள்ளிக்கு நபியவர்கள் தொழுகைக்காக வந்ததும் நபியவர்களுடன் சேர்த்து தீ வைத்து விட திட்டம் தீட்டினார்கள். திருமறைக் குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் இதைப் பற்றி விளக்குகிறது.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திட வும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் 'நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை' என்று சத்தியம் செய்கின்றனர். 'அவர்கள் பொய்யர்களே' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக் கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அவர்களின் உள்ளங்கள் வெடித்துச் சிதறினால் தவிர அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களின் உள்ளங் களில் உள்ள சந்தேகத்தின் அடையாள மாக இருந்து கொண்டே இருக்கும். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (09 : 107 - 110)

இறைவனின் தூதரையே கொலை செய்யும் அளவுக்கு காபிர்களின் உள்ளத்தில் குரோதத் தீ கொழுந்து விட்டு எறிந்தது. ஆனால் அல்லாஹ்வோ காபிர்களின் இந்த தீய எண்ணத்தை நாசப்படுத்தி இறைவனின் தூதரை காப்பாற்றினான்.

நமது வாழ்க்கையில் சாதாரமாக அடுத்தவர்கள் மீது நமக்கு ஏற்படும் வெருப்பு, கோபங்கள் தான் சிறிது சிறிதாக சேர்ந்து குரோதத்தை உருவாக்கி உறம் போடுகிறது.

இந்த குரோத குணம் கொண்டவர்கள் சரியாக பேசுவதில்லை, பேசினாலும் உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்றைப் பேசுவார்கள். மற்றவர்களுக்கு மத்தியில் நம்மைப் பற்றிப் பேசும் போது புகழ்ந்து பேசுபவர்கள் அல்லது நல்ல விஷயங்களைப் பேசுபவர்கள் நாம் நகர்ந்தவுடன் அல்லது நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றி இழிவாக, பொய்யான தகவல்களை எல்லாம் பேசுவார்கள். இவர்களின் இப்படிப்பட்ட வேலைகளுக்குக் காரணம் குரோதம் என்ற தீய குணம் தானே தவிர வேறில்லை.

நயவஞ்சகத்தை உண்டாக்கும் குரோதம்.

உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்றைப் பேசும் நயவஞ்சகத் தனத்தை அல்லது நம்மிடம் நல்லதையும் வெளியில் நமக்கெதிராகவும்  செயல்பட வைக்கும் பண்மை இந்த குணம் உண்டாக்குகிறது.

நபியவர்களின் காலத்தில் நபியவர்களை இறைவனின் தூதராக ஏற்றுக் கொண்டதாக சிலர் சொல்லிக் கொண்டார்கள் ஆனால் உண்மையில் அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக் கொள்ளவே இல்லை.

ஆனால் நபியிடம் வரும் போது நபியவர்களை சொல்வதை சரி காண்பார்கள். நபியின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதைப் போல் காட்டிக் கொள்வார்கள். நபியவர்களை விட்டு காபிர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றால் நபிக்கு மாற்றமாக இஸ்லாத்திற்கும், முஸ்லீம்களுக்கும் எதிராக செயல்படுவார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம் எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர் (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர். அல்லாஹ்வையும் நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர்.(உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர் அவர்கள் உணர்வதில்லை.

அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கிவிட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. புமியில் குழப்பம் செய்யாதீர்கள் என்று அவர்களிடம் கூறும் போது நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே எனக் கூறுகின்றனர்.

கவணத்தில் கொள்க அவர்களே குழப்பம் செய்பவர்கள் எனினும் உணர மாட்டார்கள். (2: 8 -12)

உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசும் தீய நயவஞ்சக குணத்தைக் கூட இந்த குரோதம் ஏற்படுத்தி விடுகிறது.

முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை தெளிவாக அறிந்திருந்த யுதர்கள், அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோத குணத்தின் காரணமாக அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். மறுத்த்தது மட்டுமின்றி நபியவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் அவர்கள் தாம் என்பதை பல வசனங்களில் திருமறைக் குர்ஆன் நமக்கு மிகவும் அளகாக தெளிவுபடுத்துகிறது.

தவிர்ந்து கொள்வது எப்படி?

குரோதம் என்ற தீய குணத்தை தவிர்ந்து கொள்ள வேண்டுமானால் நமது உள்ளத்தில் தீய எண்ணங்கள் ஏற்படும் போதே முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தீய எண்ணங்கள் ஏற்படும் போது அவுது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம்என்று கூறி அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேடிக் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (புகாரி - 3276)

நமக்கு அடுத்தவர்கள் தீயது செய்ய நினைத்தாலும் நாம் அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்தவரை நல்லது மாத்திரமே செய்ய வேண்டும். அப்படி செய்கின்ற பட்சத்தில் நமது நல்லண்ணம் அதிகரித்து, தீய எண்ணங்கள் நம்மை விட்டும் விளகுவதற்கு அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

எந்த சமுதாயம் தம்மை தாமே சீர்திருத்திக் கொள்ளவில்லையோ அந்த சமுதாயத்தை அல்லாஹ்வும் சீர்திருத்தமாட்டான். (அல்-குர்ஆன் 3: 11)

வாழும் வரை நல்லவர்களாக வாழ்ந்து நாளை மறுமையில் வெற்றி பெற்று சுவர்க்கம் என்ற அழகிய இடத்தை நாம் அடைவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!         
  ரஸ்மின் M.I.Sc