தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

நன்மைகளைப் பாழாக்காதீர்...!

கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்: நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்!
இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மண் படிந்துள்ளது.அதன் மீது மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் : 2 : 264)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன் அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் (அறிவிப்பவர்: அபூஉமாமா அல் பாஹிலி (ரலி) ஸூனன் நஸயி)

இறை நம்பிக்கையைப் பாழ்படுத்தும் காரியங்கள் உலகில் எத்தனையோ  நிறைந்துள்ளன. சிறு, பெரும் பாவங்கள் என வகைவகையாய் இறை மார்க்கம் அடையாளம் காட்டியுள்ளதில் பெரும்பாலானவற்றை நாம் அறிந்து வைத்துள்ளோம்.  இருந்தபோதும், ஈமான் பலம் பெறுவதற்காக நமக்கேற்படும்  பல சோதனைகளை அல்லாஹ்விற்காக என்ற தூய மனதோடு பொறுமை காக்கின்றோமா? என்பதை அன்றாடம் சுய ஆய்வு செய்து கொள்ள நாம் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். 

காரணம் புகழ் என்பது எப்பேர்ப்பட்ட அறிஞனான மனிதனையும் அசைத்துப் பார்க்கும் ஒரு போதை!  தன்னையுமறியாமல் உள்ளத்தில் சலனத்தை எற்படுத்தும் அந்த போதைக்குப் பலியானவர்கள் கூடவே தற்பெருமை தலைக்கணம் போன்றவற்றையும் போனஸாகப் பெற்று விடுகின்றனர். இதனால் முகஸ்துதிக்குப் பலியாகும் அவலமும் ஏற்பட்டு விடுகிறது.

இறைவிசுவாசிகளாகிய ஏகத்துவப் பாதையில் பயணிப்போர் மேற்சொன்ன புகழ்ச்சிக்கு இடம் தருவார்களேயானால் அல்லது அதைப் பற்றிய விழிப்புணர்வை கைகொள்ளாமல் இருப்பார்களேயானால் சரியான பாதையை விட்டு அவர்களது வாழ்வு தடுமாறத் துவங்கும்.

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ மக்களோ அந்நாளில் பயன் தராது. (அல்குர்ஆன் 26: 88-89)

உள்ளுணர்வுகளில் சில மகிழ்வலைகளை ஏற்படுத்தி நான் என்ற தலைக்கணத்தில் நம்மையும் அறியாமல் தத்தளிக்க வைக்கும் இந்த உணர்வுகளைப் பற்றி எச்சரிக்கையுடனிருப்பது மறுமை வாழ்விற்கு சிறந்தது.  காரணம், அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் செய்யப்படும் அமல்களில் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்தை மழுங்கச் செய்து மனிதர்களிடம் பெருமை தேடும் மறைவான இணைவைப்பு எனும்  கொடுமைக்குக் கொண்டு செல்லும் அபாயம் இதிலுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றி தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டபோது அவர்கள் ரியா என்று பதிலளித்தார்கள். (மஹ்முத் பின் லபித் (ரலி) முஸ்னத் அஹ்மத்)

ஒரு மனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தெரிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார்.இதுவே மறைவான இணைவைப்பாகும் (இப்னுமாஜா)

கண்ணியமிகு அல்லாஹ் தன் திருமறையில் கூறும்போது:

தமது தொழுகையில் கவனமற்று பிறருக்குக் காட்டுவதற்காக தொழுவோர்க்குக் கேடு தான், (அவர்கள்) அற்பமான எதையும் (கொடுக்க) மறுக்கிறார்கள் (அல்குர்ஆன் 107:4-7) என்று எச்சரித்துக் கூறுகிறான். 

அல்லாஹ்விற்காக என்ற எண்ணமில்லாமல் செய்யப்படும் அமல்கள் கேடாகவே முடியும் என்று அல்லாஹ் கூறுகின்றான். உண்மையான இறைநம்பிக்கையாளர்கள், அல்லாஹ்வை மட்டுமே மனதில் கொண்டு  வணக்கத்தில் ஈடுபடுவார்கள். மற்றவர்களிடமிருந்து எவ்வித வெகுமதியையோ நன்றியையோ அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள்.

இதில் தொழுகை என்ற அமல் மட்டுமல்லாமல், நோன்பு, ஹஜ், தர்மம்,  மற்றும் மார்க்கம் அனுமதிக்கும் நன்மையான காரியங்கள் எந்தவொன்றாயிருந்தாலும் அதை நமக்கு அருட்செய்த இரட்சகனாகிய அல்லாஹ்வுக்காக மட்டுமே என்ற தூய நிய்யத்துடன் செயல்படுத்த வேண்டும். அதை விடுத்து பிறர் மெச்சுவதற்காக என்ற நிய்யத் ஏற்படுமேயானால் நமது நல்லறங்கள் பாழாகி விடும்.

உதாரணமாக பள்ளிவாசலுக்கு ஒரு டியூப்லைட் ஒருவர் வாங்கிக் கொடுத்திருப்பார். அது ஒரு சிறிய அற்பமான செலவுதான் ஆனால் அதில் தன் பெயர்,குடும்பப்பெயர், அட்ரஸ் எல்லாவற்றையும் அந்த டியூப்லைட்டில் எழுதி பள்ளியில் மாட்டி வைத்திருப்பார்.

ஒரு சின்ன டியூப்லைட் அன்பளிப்பு செய்யும் விஷயத்தில் எந்த மாதிரியெல்லாம் மக்கள் விளம்பரம் தேடுகின்றனர்? எனும்போது வேறு பல தர்ம காரியங்கள், பள்ளி கட்டுமானம், ஜகாத், இஸ்லாம் கூறும் பொதுக் காரியங்கள் போன்றவற்றில்; மக்கள் முகஸ்துதிக்குப் பலியானால் என்ன நிலையாகும்?

இஸ்லாம் என்ற கொள்கையும் கோட்பாடும் எத்தகைய அந்தஸ்துடையது! அது எப்பேர்ப்பட்ட நுண்ணறிவாளனால் அருளப்பட்டது என்ற கருத்தை வலுவாக சிந்திக்க வேண்டும். அதைப் பின்பற்றுவதன் மூலம் மனிதர்கள் அதற்குண்டான பரிபூரண கூலியை கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்களா? என்பதை ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

உலகில் தங்கள் பொறுப்பின் கீழ் உள்ளவர்களுக்கே சரியான கூலி தராத, தர முடியாத,  தர மறுக்கின்ற இந்த மகாத்மாக்கள் மகத்துவமிக்க ஏகநாயனுக்காக செய்யக் கூடிய காரியங்களுக்கு என்ன தந்து விட முடியும்?

அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.(அல்குர்ஆன் 4:38) 

நீங்கள் சில (பாவச்) செயல்களைப் புரிகிறீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்) அவற்றை நாங்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் மூபிகாத் என்றே கருதி வந்தோம். (அனஸ்(ரலி) புகாரி 6492)

மூபிகாத் என்றால் பேரழிவை உண்டாக்குபவை என்று பொருள். இதுவெல்லாம் சிறிய பாவம் தானே என்று நாம் மலிவாகக் கருதும் சில செயல்கள், அல்லாஹ்விடம் பெரும் தண்டனைக்குரிய குற்றங்களாக மாறி விடுவதுண்டு.    

அல்லாஹ்வுடைய உதவி தவிர வேறு எந்த உதவியுமில்லாத மறுமை நாளில் முகஸ்துதியை விரும்பிய மனிதனுக்கு என்ன கூறப்படும்?

மறுமையில் கூலி கேட்கும்போது, உலகில் யாருக்காக செய்தாயோ அவர்களிடமே கேட்டுக் கொள் என்று கூறப்படும் (புகாரி)

ஒரு காரியத்தை எண்ணும்போதும் செய்யும்போதும் வல்ல நாயன் அல்லாஹ் அதை நன்கறிகிறான். இந்த பிரபஞ்சத்தில் எதுவும் அவனுக்கு மறைந்ததல்ல என்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிமிடமும் வலுவாக இருக்க வேண்டும். மேலும், நம் செயலுக்குண்டான கூலியை,  சரியான கூலியை அல்லாஹ் தருவான் அவன் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அனைத்தையும் கண்காணிப்பவனாக அல்லாஹ் இருக்கிறான் என்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் வலுவாக இருக்க வேண்டும். 

திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்:

மனிதனை படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.(அல்குர்ஆன் 50:16-18)
இப்படிப்பட்ட கூர்மையான ஆற்றல் நிறைந்த நிர்வாகியான அல்லாஹ்வின் தன்மையை உணராமல் மலிவான விளம்பரங்களில் நாட்டங் கொள்வது நன்மையைப் பாழாக்கி விடும்.ஒவ்வொரு அம்சத்திலும் தூய்மையைப் பற்றி பிடிப்பது ஏக இறைநம்பிக்கையாளனின் தலையாய பண்பாக இருத்தல் வேண்டும்.

ஒரு மனிதர் இயலாமையினால் உதவி கேட்கிறார்.  கல்விக்காகவோ, மருத்துவத்திற்காகவோ, வேலை வாய்ப்புக்காகவோ அல்லது இயல்பு வாழ்க்கைக்கோ உதவி கேட்கும்போது செய்கிறோம். செய்துவிட்டு உதவி பெற்றவரிடமிருந்து மிகுந்த மரியாதையை எதிர்பார்க்கிறோம். பிரதிபலனாக எதை எதையெல்லாமோ எதிர்பார்க்கின்றனர். உதவிபெற்றவரும் நன்றிகடனாக மிகுந்த மதிப்பு மரியாதை தருகிறார். உபசரிக்கிறார். நாள்பட நாள்பட இந்த உபசரிப்பில் ஏதேனும் குறை ஏற்பட்டுவிட்டால் போதும் உதவி செய்தவர் மனபக்குவமின்றி தான் கொடுத்து உதவியதை சொல்லிக் காட்டுவார் பார்த்தீர்களா? அவன் எப்படியிருந்தான்? என்ன மாதிரி தவிப்பில் இருந்தான்! நான் அன்று உதவி செய்யாவிட்டால் இவரின் நிலை என்னவாக இருக்கும்? இன்றைக்கு இவன் எப்படி நம்மோடு மரியாதைக் குறைவாக  நடக்கிறான். பாருங்கள் என்று சொல்லி; காண்பித்து, தொல்லை தருவதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்களை வல்ல நாயன் அல்லாஹ் தன் திருமறையின் வாயிலாக எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்.  

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லைத்தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும் மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன். சகிப்புத் தன்மை மிக்கவன். (2:262-263)

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தான் கொடுத்து உதவியதை சொல்லி காட்டுபவர், தன்னுடைய கணுக்கால் கீழே ஆடையை இழுத்து சென்றவர், பொருளை விற்பனை செய்வதற்காக பொய் சத்தியம் செய்தவர்,இத்தகைய மூன்று பேரிடமும் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான், பார்க்கவும் மாட்டான். அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும் கடுமையான வேதனையும் உண்டு. (அபுதர் கிஃபாரி (ரலி) முஸ்லீம்)

நல்லவற்றில் நீங்கள் எதை செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் (அல்குர்ஆன். 2: 272) 

ஜூன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்;லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான் என்று கூறியதைக் கேட்டேன் (சலமா பின் குஹைல் புகாரி 6499)

நன்மைகள் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் அருட்கொடையாகும். அவற்றை அவனுக்காக என்ற தூய எண்ணத்துடன் செயல்படுத்துவதில் தான் ஈமானின் வெற்றி உள்ளது. ஈமானுக்கு வெற்றி தரும் நன்மைகளை பாழாக்காதீர்கள். 

நன்றி: துபை TNTJ