பெரியகுளத்தில் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை நம்பி பிழைப்பு நடத்தி வந்த தொழிலாளர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்கின்றனர். பெரியகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் லாரிகளுக்கும் மேல் இருந்தன. தமிழகத்தில் நாமக்கல்லிற்கு அடுத்ததாக இங்கு லாரி தொழில் சிறப்பாக நடந்து வந்தது. இத்தொழிலைச் சார்ந்து டயர் வியாபாரம், மெக்கானிக்கடைகள், பஞ்சர்கடைகள் உட்பட பல உப தொழில்களும் அமோகமாக நடந்து வந்தன. இப்பகுதியை சேர்ந்தவர்கள் லாரிகளில், டிரைவர்கள் மற்றும் கிளீனர்களாக அதிகளவில் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். லோடுமேன்களுக்கும் அதிக வேலை கிடைத்தது. பெரியகுளத்தை மையமாக கொண்டு தேனி மாவட்டத்தில் விளையும் வாழை, மா, இலவம் உட்பட பல வகையான விவசாய விளை பொருட்கள் லாரிகள் மூலம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. இதனால் லாபம் தரும் தொழிலாகவும், அதிக வேலைவாய்ப்பை தருவதாகவும், இத்தொழில் விளங்கியது. இந்நிலையில் அவ்வப்பபோது உயர்த்தப்படும் டீசல் விலை உயர்வு, குறைவான வாடகையால், நாளடைவில் லாரி தொழில் நசிந்தது.ஏராளமான லாரிகள் இருந்த இடத்தில், தற்போது 50 க்கும் குறைவான லாரிகளே உள்ளன. தற்போது தொழில் போட்டி காரணமாக வாடகையை உயர்த்த முடியாத நிலை உள்ளது. இதனால் லாபம் கிடைக்கவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் இத்தொழிலில் அதிக ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இதனைச் சார்ந்த தொழில்களும் நசிந்து விட்டன. லாரிகள் குறைந்து வருவதால் டிரைவர்கள் மற்றும் கிளீனர்ளுக்கும் வேலை கிடைக்கவில்லை. இவர்கள் பிழைப்புக்காக சங்ககிரி, சேலம், திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.