தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு குவைத்தில் அவதிப்பட்ட தமிழர்கள்



சென்னை :""அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில், குவைத் நாட்டிற்கு கார் டிரைவர் வேலைக்குச் சென்றேன். வேலை வாங்கிய முதலாளி சம்பளம் கொடுக்காமல் கத்தியால் குத்தியதால், இந்தியா திரும்ப வேண்டியதாகி விட்டது,'' என்று தஞ்சையைச் சேர்ந்த மன்சூர் அலி கண்ணீர் மல்கக் கூறினார்.

தமிழகத்திலிருந்து குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற 20 பேர், அங்கு பேசியபடி சம்பளம் கிடைக்காததாலும், வேலை கொடுத்தவர்கள் சம்பளம் கொடுக்காமல் துன்புறுத்தியதாலும், பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், குவைத் அரசு மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள், நேற்று முன்தினம் மும்பை வந்து, அங்கிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இவர்களில், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூரைச் சேர்ந்த மன்சூர் அலி(26), சிவகங்கை மாவட்டம், உஞ்சனையைச் சேர்ந்த ஆசைத்தம்பி(30) ஆகிய இருவரும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று மாலை சென்னை வந்தனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நிருபர்களிடம் மன்சூர் அலி, கண்ணீர் மல்கக் கூறியதாவது: தனியார் ஏஜன்டிடம் 1 லட்சம் ரூபாய் கட்டி, 2007ம் ஆண்டு குவைத்தில் பர்வானியா என்ற இடத்திற்கு, கார் டிரைவர் வேலைக்கு போனேன். மாதம் 8,000 ரூபாய் சம்பளம் பேசி அழைத்துச் சென்றவர்கள், 6,000 ரூபாய் தான் கொடுத்தனர். ஆறு மாதம் தான் சம்பளம் கிடைத்தது. அதன் பின், முறையாக சம்பளம் கிடைக்காததால், அங்கேயே இன்னொருவரிடம் 8,000 ரூபாய் சம்பளம் பேசி அழைத்துச் சென்றனர். அவர், 10 மாதம் சம்பளம் கொடுத்தார்; அதன் பிறகு கொடுக்கவில்லை.

இது பற்றி கேட்டதற்கு, எனது முதுகில் கத்தியால் குத்திவிட்டார். ரத்தத்துடன் இந்திய தூதரகத்திற்கு ஓடினேன். அங்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். குவைத் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கோர்ட்டில் எனக்காக வாதாட சரியான வக்கீல் கிடைக்காததாலும், அரபி மொழி தெரியாததாலும் சமாதானமாக போக வேண்டியதாகி விட்டது. அதன் பின், தூதரகத்தில் 10 மாதம் தங்க வைத்திருந்தனர். இந்தியாவுக்கு அனுப்புங்கள்; இல்லாவிட்டால் வேலை பார்க்க அனுமதியுங்கள் என்றதற்கும் முடியாது என கைவிரித்தனர்.

என் மாதிரியே பல பிரச்னைகளால் 20 பேர், இந்திய தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், குவைத் அரசு மூலம் விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்; மற்றவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வேலை பார்ப்பதை விட வெளிநாட்டில் வேலை பார்த்தால் நிறைய சம்பளம் கிடைக்கும்; குடும்பத்திற்கு உதவலாம் என்று நினைத்துப் போனேன். அங்கு, எல்லா வகையிலும் ஏமாற்றப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டு, வெறுங்கையோடு வீடு திரும்பியது வேதனையாக இருக்கிறது.இவ்வாறு மன்சூர் அலி கூறினார்.

சிவகங்கை மாவட்டம், உஞ்சனையைச் சேர்ந்த ஆசைத்தம்பி கூறியதாவது: குவைத்திற்கு கார் டிரைவர் வேலை பார்த்தேன்; 15 ஆயிரம் ரூபாய் சம்பளம். நான் வேலை பார்த்த கம்பெனி ஏஜன்ட், "விசாவை நீட்டிக்கவும், ஒர்க் பர்மிட் வாங்கித் தரவும் குவைத் பணம் 480 தினார் வாங்கிக் கொண்டு, ஒர்க் பர்மிட் வாங்கிவிட்டேன்; நீ தொடர்ந்து வேலை பார்க்கலாம்' என்று சொன்னார். எந்த ஆவணங்களையும் என்னிடம் அவர் தரவில்லை. ஒரு நாள் திடீரென்று குவைத் போலீசார் என்னை பிடித்த போது தான், ஏஜன்ட் என்னை ஏமாற்றியது தெரிய வந்தது. சிறையில் அடைக்கப்பட்டேன்.அங்கு போனதும் முதலில் எனக்கு மொட்டை அடித்தனர். உள்ளே சென்று பார்த்தால், இந்தியாவைச் சேர்ந்த பலர் மொட்டை அடிக்கப்பட்டு இருந்தனர். விடுதலை செய்யப்பட்டதும், குவைத் அரசு மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். பணத்திற்கு ஆசைப்பட்டு, இனி வெளிநாட்டு வேலைக்கு போக மாட்டேன்.இவ்வாறு ஆசைத்தம்பி கூறினார்.